மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடல்


மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: சென்னையில்  பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடல்
x
தினத்தந்தி 19 Jan 2022 7:52 AM GMT (Updated: 2022-01-19T13:22:50+05:30)

சென்னையில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. இதில் 30 ஆயிரம் தெருக்களுக்கு மேலாக தொற்று பாதிப்பு உள்ளன.

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் தற்போது 58 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 71 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் கொரோனா பாதித்த தெருக்கள் மூடப்படவில்லை. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களை தடுப்பு வேலிகள் அமைத்து மூடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் 7 நாட்கள் கட்டாயம் தனிமைபடுத்தப்படுகிறார்கள். அவர்களை கண்காணிக்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும் டாக்டர்கள் குழு செயல்படுகிறது.

தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு உதவ களப்பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தொற்று உறுதியானவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் ஒரே ஸ்டிக்கரில் அவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்படுகிறது.

சென்னையில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. இதில் 30 ஆயிரம் தெருக்களுக்கு மேலாக தொற்று பாதிப்பு உள்ளன. 3 முதல் 6 பேர் வரை பாதிக்கப்பட்ட தெருக்களாக 1,850-ம், 6 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்ட தெருக்களாக 729-ம் உள்ளன.

10 பேர் முதல் 25 பேர் வரை அதிகம் பாதிப்புள்ள தெருக்களாக 387 கண்டறியப்பட்டுள்ளது. இந்த தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. அந்த தெருக்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு அந்த தெருக்களை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

Next Story