வில்லியனூர் அருகே பரபரப்பு திருமணமான அரசு பள்ளி ஆசிரியர் முன்னாள் மாணவியுடன் ஓட்டம்


வில்லியனூர் அருகே பரபரப்பு திருமணமான அரசு பள்ளி ஆசிரியர் முன்னாள் மாணவியுடன் ஓட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2022 4:27 PM GMT (Updated: 2022-01-19T21:57:49+05:30)

வில்லியனூர் அருகே திருமணமான அரசு பள்ளி ஆசிரியர் வீட்டைவிட்டு வெளியேறி முன்னாள் மாணவியை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

வில்லியனூர்
வில்லியனூர் அருகே திருமணமான அரசு பள்ளி ஆசிரியர் வீட்டைவிட்டு வெளியேறி முன்னாள் மாணவியை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

காதல் திருமணம்

புதுவை மாநிலம் மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், மகேஸ்வரி (வயது 38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது மகேஸ்வரிக்கு அவரது குடும்பத்தினர் 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர் 50 பவுன் நகை, கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கொடுமை செய்தனர். இல்லையென்றால் மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

முன்னாள் மாணவியுடன் கள்ளக்காதல்

இதையடுத்து செந்தில்குமார், மகேஸ்வரி இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பராமரிக்க உதவியாக செந்தில்குமார், தன்னிடம் படித்த முன்னாள் மாணவி ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். 
அந்த பெண்ணுடன் செந்தில்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மகேஸ்வரி அந்த பெண்ணை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார், அதன்பின் திரும்பி வரவில்லை. இதுபற்றி அவர்கள் வீட்டில் வேலை செய்த பெண் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, அவரும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்பது தெரியவந்தது.

4 பேர் மீது வழக்குப்பதிவு

இதுபற்றி விசாரித்தபோது, செந்தில்குமாரும், அந்த பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டது மகேஸ்வரிக்கு தெரியவந்தது. இதுபற்றி தனது மாமனார், மாமியாரிடம் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மகேஸ்வரி, வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை நாராயணன், தாய் வத்திஸ்கா, அண்ணன் ஞானசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான அரசு பள்ளி ஆசிரியர், மனைவி மற்றும் மகனை தவிக்கவிட்டு முன்னாள் மாணவியுடன் சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story