மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் வெள்ளி கவசங்கள் - சசிகலா வழங்கினார்


மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் வெள்ளி கவசங்கள் - சசிகலா வழங்கினார்
x
தினத்தந்தி 19 Jan 2022 7:02 PM GMT (Updated: 19 Jan 2022 7:02 PM GMT)

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் வெள்ளி கவசங்கள் - சசிகலா வழங்கினார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் புகழ்பெற்ற வள்ளி, தெய்வானை முருகன் கோவில் உள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வழிகாட்டு நடைமுறை உள்ளதால் தைப்பூச தினமான நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று நடைபெற்ற விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். கோவிலில் நேற்று நடைபெற்ற தைப்பூச விழா சிறப்பு பூஜையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகபெருமானுக்கு ரூ.35 லட்சத்தில் 4 அடி உயரமும், 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சாமி தரிசனம் செய்தார். அருகில் இருந்த பொன்னியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக பள்ள மொளச்சூர் பகுதியில் கட்டப்பட உள்ள பெருமாள் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசியை கொரோனா நிவாரண உதவியாக வழங்கினார். இதில் அ.ம.மு.க காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Next Story