விளையாட்டு சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த சட்டவிதிகள் - மாநில அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு


விளையாட்டு சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த சட்டவிதிகள் - மாநில அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jan 2022 9:09 PM GMT (Updated: 2022-01-20T02:39:20+05:30)

விளையாட்டு சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த சட்டவிதிகளை கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை என கூறி நித்யா என்ற வட்டு எறிதல் வீராங்கனை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், ‘மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கட்டாயமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்தை மாற்றியமைக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

முறைப்படுத்த சட்டவிதிகள்

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த எந்த சட்டமும் இல்லை. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டு சங்கத்தின் செயல்பாடுகளையும் முறைப்படுத்துவதற்கான சட்டவிதிகளை வகுப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். அவற்றை அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

விளையாட்டு சங்கங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். தகுதியான விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாதது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனி குறைதீர் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

ஆன்லைனில் வெளியிட வேண்டும்

விளையாட்டு சங்கங்களில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 75 சதவீதம் உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

விளையாட்டு சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை நிர்வாகிகளாக நியமிக்கக்கூடாது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்வதோடு, அந்த போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றையும் ஆன்லைனில் வெளியிட வேண்டும்.

தடைவிதிக்கவேண்டும்

ஒவ்வொரு சங்கமும் தனித்தனியாக இணையதளம் ஆரம்பித்து, சங்கத்துக்கு வந்த நிதியுதவி குறித்த விவரங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும்.

தகுதியற்ற விளையாட்டு வீரர்கள் யாரேனும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சங்கம் 2 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story