ஈரோட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை ரூ.3.40 கோடியில் விரிவாக்கம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஈரோட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை ரூ.3.40 கோடியில் விரிவாக்கம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2022 9:48 PM GMT (Updated: 19 Jan 2022 9:48 PM GMT)

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையையும், ஓசூரில் புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உரிய நேரத்தில் சினை பிடித்து கன்று பெறவும், தரமான பால் மற்றும் அதிக அளவு பால் பெற்று பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியில் லாபம் ஈட்டவும், கால்நடைகளுக்கு தரமான கால்நடை தீவனம் வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு, ஈரோடு ஒன்றியத்தில் 1982-ம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், இத்தொழிற்சாலையில் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்தீவன ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் எந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சமும், மத்திய பங்களிப்பாக ரூ.1 கோடியே 70 லட்சமும் என மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். இதன்மூலம் 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை சார்ந்த 7 ஆயிரத்து 792 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்க வழிவகை ஏற்படும்.

தாது உப்பு கலவை

கறவையினங்களின் பால் உற்பத்தி, இனப்பெருக்க திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிப்பதில் தாது உப்புக் கலவை பங்கு மிக முக்கியமானதாகும். அவ்வாறு, பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை வழங்கும் பொருட்டு ஈரோடு, விழுப்புரம், திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் நாளொன்றுக்கு தலா 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலைகள் மூலம் தாது உப்புக் கலவை தயாரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமும் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 லட்சம் மற்றும் மத்திய பங்களிப்பாக ரூ.67.50 லட்சம், என மொத்தம் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை கமிஷனர் கோ. பிரகாஷ், ஆவின் மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story