வாடகை தாயாக இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடுக்காமல் மோசடி


வாடகை தாயாக இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடுக்காமல் மோசடி
x
தினத்தந்தி 20 Jan 2022 12:13 AM GMT (Updated: 2022-01-20T05:43:16+05:30)

வாடகை தாயாக இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடு்க்காமல் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மோசடி செய்து விட்டதாக கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் வாடகைத்தாய் கலாசாரம் ஓசை இல்லாமல் உலா வந்து கொண்டிருக்கிறது. குழந்தை பேறு இல்லாத பணக்கார தம்பதிகள் இந்த வாடகை தாய்மார்களை பயன்படுத்தி, செயற்கை முறையில் குழந்தை பெற வைத்து, பின்னர் அதற்கு பெரிய அளவில் பணம் கொடுத்து, குழந்தைகளை வாங்கி சென்று விடுவார்கள். சென்னையில் சில தனியார் செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகள் இந்த குழந்தை வியாபாரத்தை செய்து வருகிறார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு சில இளம்பெண்கள் இந்த வாடகை தாய் தொழிலை செய்து வருகிறார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர்தான், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓசை இல்லாமல் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். புகார் கொடுத்த இளம்பெண் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர். அவர் கொடுத்த புகார் மனு விவரம் வருமாறு:-

இரட்டை குழந்தை பெற்றேன்

நான் வாடகை தாய் தொழிலில் முதன்முதலாக ஈடுபட்டேன். எனது தோழி மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் என்னை அணுகினார். செயற்கை முறையில் கருவை வயிற்றில் சுமந்து, ஒரு ஆண் குழந்தை பெற்று கொடுத்தால், ரூ.4 லட்சம் தருவதாக சொன்னார். நானும் அதற்கு சம்மதித்தேன். என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் போட்டார்கள். குழந்தை பிறந்தவுடன், பணத்தை வாங்கிக்கொண்டு வெளியில் சொல்லாமல் போய் விடவேண்டும், என்று நிபந்தனை போட்டார்கள். குழந்தையை யாருக்கு கொடுக்கப்போகிறார்கள் என்பதை என்னிடம் சொல்லவில்லை.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். செயற்கை முறையில் கருவுற்று, நான் குழந்தையை வயிற்றில் சுமந்தேன். சுகமான சுமையாகத்தான் இருந்தது. ரூ.4 லட்சம் கிடைக்கும் என்ற சந்தோசத்திலும் எனக்கு அந்த சுமை மேலும் சுகமாக இருந்தது. குழந்தை பிறக்கும்வரை என்னை கண்ணைப்போல அந்த ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்தன. இதனால் எனக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக, ரூ.5 லட்சம் தருவதாக சொன்னார்கள். இரட்டை குழந்தை எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்தது. கடந்த ஜனவரி 3-ந் தேதி எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ஏமாற்றி விட்டனர்

குழந்தைகளை என்னிடம் காட்டிவிட்டு எடுத்து சென்று விட்டனர். பின்னர் என்னை ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பிவிட்டனர். ஒரு வாரம் கழித்து வந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்கள். ஒரு வாரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு வந்தேன்.

அப்போது அவர்கள் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் பெற்று கொடுத்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன என்றும், எனவே ரூ.5 லட்சம் தர முடியாது என்றும் தெரிவித்தனர். ரூ.10 ஆயிரம் மட்டுமே தர முடியும் என்றும் சொன்னார்கள். என்னை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை மட்டும் கொடுத்து வெளியில் அனுப்பி விட்டனர். எனக்கு ரூ.5 லட்சம் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஏமாற்றிய ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீதும் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைந்தகரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story