தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 Jan 2022 12:19 AM GMT (Updated: 2022-01-20T05:49:05+05:30)

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடா்பாக அனைத்து கட்சியினருடன் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒரே கட்டமாக தோ்தல் நடத்த வேண்டும் என எல்லா கட்சியினரும் வலியுறுத்தினர்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது.

அரசியல் கட்சி பிரதிநிதிகள்

இதன் ஒரு கட்டமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகளின் கமிஷனர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, மாநகராட்சி துணை கமிஷனர் விசுமகாஜன், முதன்மை தேர்தல் அதிகாரி கு.தனலட்சுமி உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் வக்கீல் பிரிவு செயலாளர் கிரிராஜன், சுந்தர் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., வக்கீல் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல், காங்கிரஸ் சார்பில் துணைத்தலைவர் தாமோதரன், வக்கீல் பிரிவு நிர்வாகி நவாஸ், பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல தேர்தல் கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், தே.மு.தி.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை, திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹக்கிம்ஸ், மணிசங்கர், பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் மாநில செயலாளர் சார்லஸ், மணிசங்கர், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டம்

இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது? தேர்தல் விதிமுறைகள் என்னென்ன? கொரோனா சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கையாளுவது, தேர்தல் தொடர்பான சட்டதிட்ட விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கட்சி பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

ஒரே கட்டமாக நடத்த வேண்டும்

கிரிராஜன் (தி.மு.க.) :- 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்படி நடைபெற்றதோ அதே போன்று இந்தத் தேர்தலையும் நடத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்திட வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறவேண்டும். நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைத்தோம்.

பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) :- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக அதேவேளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதுகாப்பாக நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடிய குளறுபடிகள் குறித்து ஆதாரத்தோடு தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம். ஒரு வார்டில் இருக்கும் வாக்காளர் பட்டியலை வேறு வார்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். இந்த தேர்தலை துணை ராணுவப்படையினர் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் சில விளக்கங்கள் கேட்டிருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பா.ஜ.க.) :- தேர்தலை ஒரே கட்டமாக நடத்திட வேண்டும். நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமெனில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அவசியம். வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே அதனை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பை உரிய கால அவகாசத்துடன் வெளியிட வேண்டும்.

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைய உள்ளன. குறிப்பாக கொளத்தூர், துறைமுகம், சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் உள்ளடங்கிய வாக்குச்சாவடிகளில் நியாயமான தேர்தல் நடத்த துணை ராணுவத்தினர் பாதுகாப்பு தேவை. தற்போது மேயர் பதவிகளுக்கு தாழ்த்தப்பட்ட பெண்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய அதிகாரமும், மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்காக...

தாமோதரன் (காங்கிரஸ்) :- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு) :- தேர்தல் பிரசாரத்தின்போது சாதி, மதங்களை முன்வைத்து வாக்குகளை சேகரிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடாது. அது எதிர்காலத்தை சீரழித்துவிடும் என்று வலியுறுத்தினோம். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட இதர கட்சிகளின் நிர்வாகிகளும் வெளிப்படுத்தினார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரிரு தினங்களில்...

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் பேசுகையில், ‘‘அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் ஆணையத்தால் பரிசீலிக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்திட அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’’, என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலெக்டர்களுடன் ஆலோசனை

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதைதொடர்ந்து மாலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி காட்சி மூலமாக மாநில தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார். கருத்துகளையும் கேட்டறிந்தார்.

Next Story