கத்தியை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிமுக பிரமுகர் கைது


கத்தியை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிமுக பிரமுகர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 5:34 AM GMT (Updated: 2022-01-20T12:00:33+05:30)

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் வினோத். இவர் பூலாம்பாடி அதிமுக நகர செயலாளராக உள்ளார்.

இதற்கிடையில், பூலாம்பாடியை சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணம் ஆன பெண் ஒருவருக்கு வினோத் அடிக்கடி பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை வழிமறித்த வினோத் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தன் ஆசைக்கு இணங்க மறுத்தால் எரிவாயு நிலையத்தில் வைத்து உயிரோடு கொழுத்திவிடுவேன் என்றும் அந்த பெண்ணை வினோத் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வினோத்திடமிருந்து அப்பெண்ணை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் வினோத் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரை தொடர்ந்து வினோத்தை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story