புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா?


புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு  தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா?
x
தினத்தந்தி 20 Jan 2022 3:51 PM GMT (Updated: 2022-01-20T21:21:14+05:30)

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கறம்பக்குடி ஒன்றியக் குழு தலைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை:
திட்டப்பணிகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக் குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மாலா. இவருக்கும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் தி.மு.க. நிர்வாகிகளும் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கறம்பக்குடி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்சி தலைமைக்கும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கும் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மயங்கி விழுந்தார்
இந்த நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்திப்பதற்காக மாலா கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கலெக்டரை சந்திப்பதற்காக அலுவலக மாடிப்படி ஏறிக் கொண்டிருந்த போது திடீரென்று மாலா மயங்கி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டனர். மேலும் அவரது கையில் தூக்க மாத்திரை இருந்ததும் தெரியவந்தது. அதில் நான்கு மாத்திரைகள் குறைந்திருந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்? என்றும் கூறப்படுகிறது.  
இதனை தொடர்ந்து அவரை உடனடியாக சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தி.மு.க. ஒன்றிய குழு தலைவர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story