ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2022 7:00 PM GMT (Updated: 20 Jan 2022 7:00 PM GMT)

இலங்கைக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடன் வழங்கும் விவகாரத்தில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரிகள் வழங்க நிபந்தனை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இப்போது கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் இலங்கை அரசு, இந்தியாவிடம் கடனுதவியை கோரியது.

இலங்கை நிதி அமைச்சரும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே டெல்லிக்கு வந்து கடனுதவி கோரியதைத் தொடர்ந்து ரூ.18 ஆயிரத்து 90 கோடி மதிப்பிலான கடன் வசதித் திட்டத்தை இலங்கைக்கு இந்தியா அறிவித்திருக்கிறது. இது தொடக்கம்தான். வருங்காலத்தில் இலங்கைக்கு இன்னும் கூடுதலான கடனை இந்தியா வழங்கும். சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான ராஜதந்திர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

அரசியல் அதிகாரம்

இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த இந்த அம்சத்தை கருத்தில் கொண்டு, இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான ஈழத் தமிழர்களை அரசியல்ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எனவே இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியான அரசியல் அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும்படியும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் வென்றெடுத்துத் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story