சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவம் துணை கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்


சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவம் துணை கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2022 7:09 PM GMT (Updated: 20 Jan 2022 7:09 PM GMT)

சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவம் துணை கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்.

திரு.வி.க. நகர்,

சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் (வயது 21) முககவசம் அணியாமல் வந்ததாக கொடுங்கையூர் போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ்காரரை தாக்கியதாக அப்துல்ரஹீமை கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் அவரை விடிய விடிய தாக்கியதாக கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி, போலீஸ் ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்தரகுமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்துல் ரஹீமை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீமா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலக வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து துணை கமிஷனர் ஈஸ்வரன், சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story