கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? மு.க.ஸ்டாலின் ஆலோசனை


கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 20 Jan 2022 10:12 PM GMT (Updated: 2022-01-21T03:42:36+05:30)

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து அறநிலையத்துறை குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திடும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வராக மகாதேசிகன்,அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார், முன்னாள் நீதிபதி டி.மதிவாணன், சுகி.சிவம், கருமுத்து தி.கண்ணன், மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது

அதனைத்தொடர்ந்து கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் கோவில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவுக்கு 3 உறுப்பினர்களை ஆலோசனைக் குழுவிலிருந்து தேர்வு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கோவில்கள் மற்றும் திருமடங்களால் வெளியிடப்பட்ட அரிய புத்தகங்களை மறு பதிப்பாக்கம் செய்தல், மின்னணுமயமாக்குதல், விற்பனை செய்தல், ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எந்தெந்த ஆகமத்தின் கீழ் கோவில்கள் அமையப்பெற்றுள்ளதோ அந்த ஆகமத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், ஆன்மிக சொற்பொழிவுகள்-வகுப்புகளை மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் மேம்படுத்தி நடத்த திட்ட வரைவு தயார் செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிதி மேலாண்மையை மேம்படுத்த...

தற்போது கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை, குத்தகை மற்றும் அனைத்து சேவை கட்டணங்கள் பெறுவது கணினிமயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவும், திருப்பணிகள் மேற்கொள்ளவும், கோவில் நிர்வாகங்கள் பெருமளவில் செலவுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய காலத்திற்கேற்ற வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவில்களின் நிதி மேலாண்மையை மேம்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Next Story