முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - ரூ. 2.87 கோடி, 6 கிலோ தங்கம் பறிமுதல்


முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - ரூ. 2.87 கோடி, 6 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jan 2022 12:16 AM GMT (Updated: 2022-01-21T06:54:43+05:30)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஊழல் புரிந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று தேர்தல் பிரசாரத்தின்போதே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர். 6-வதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கை தற்போது பாய்ந்துள்ளது.

அவர் மீதும், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு போட்டுள்ளனர்.

ரூ.11.32 கோடி சொத்துகள்

லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கால கட்டத்தில் (23.5.2016 முதல் 6.5.2021 வரை) முறைகேடாக அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நெருக்கமானவர்கள் பெயர்களிலும் சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் வந்தன. அது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. கே.பி.அன்பழகன் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரது பெயரில் பாக்கியலட்சுமி தியேட்டரில் 50 சதவீத பங்குகள், எஸ்.எம்.புளு மெட்டல் கம்பெனியில் 50 சதவீத பங்குகள் உள்ளது. சாய் இம்பெக்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர் ஆம்ப்ஸ் என்டர் பிரைசஸ் என்ற நிறுவனம் அவரது மகன் சசிமோகன் பெயரில் உள்ளது. அவரது மகன் சந்திரமோகன் பெயரில் மருத்துவமனை, மனைவி மல்லிகா பெயரில் பாக்கியலட்சுமி எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது. கல்வி அறக்கட்டளை ஒன்றும் கே.பி.அன்பழகன் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு கல்குவாரிகளும் சொந்தமாக உள்ளன. சென்னை கோபாலபுரத்தில், அவ்வை சண்முகம் சாலையில் கணேஷ் கிரானைட் தொழிற்சாலை அலுவலகம் உள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரிலும் கிரானைட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மொத்தம் ரூ.11.32 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

58 இடங்களில் சோதனை

வழக்கு அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை வேட்டை நடத்தினார்கள்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டு, கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகம் என தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மற்றும் சென்னை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

ரூ.2.87 கோடி ரொக்க பணம்;6.63 கிலோ தங்க நகைகள் சிக்கியது

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப்பணம், 6.637 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளி மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப்பணம் கணக்கில் வராதது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். மேலும் வங்கி லாக்கர் சாவியும் கைப்பற்றப்பட்டதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

எம்.எல்.ஏ. வீட்டிலும் சோதனை

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமாக இருந்த பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Next Story