சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு பதில்


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு பதில்
x
தினத்தந்தி 21 Jan 2022 7:05 PM GMT (Updated: 21 Jan 2022 7:05 PM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

சென்னை,

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் முக்கியமான சாலைகளில் இந்த வால்டாக்ஸ் சாலையும் ஒன்றாகும். இந்த சாலையில் இந்த ஆண்டு பெய்த பெரும் மழையினால் முழங்கால் அளவிற்கு மழைநீர் ஓடியது. முதல்-அமைச்சர் ஆய்வு செய்தபோது மழைநீர் வடிவதற்கு போதுமான வடிகால் வசதி இல்லை என்பதை அறிந்தார். பின்னர் அவர், ஆணையிட்டதின் அடிப்படையில் நானும், அமைச்சர் சேகர் பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் இப்பகுதியை பார்வையிட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஒப்புதல் பெறப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த பகுதிகளில் மட்டும் 8 கல்வெட்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 4 ஆயிரத்து 600 மீட்டர் நீர்வழி போக்குகளை சரிசெய்கின்ற பணிகளில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. ரூ.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணிகள் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்.

இன்று ஆலோசனை

சென்னை மாநகர எல்லையில் 258 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 14.5 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 30.71 கி.மீ. நீளமுள்ள வடிகால் பணிகள் மற்றும் 34 சிறு பாலங்கள் இந்த ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இந்த மேற்கண்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.263 கோடி ஆகும். இப்பணிகளில் 14.5 கி.மீ. நீளமுள்ள சாலை பணிகள் மார்ச் 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும். 13.5 கி.மீ. நீளமுள்ள வடிகால் மற்றும் 18 சிறுபாலப்பணிகள் ஜூன் 30-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வால்டாக்ஸ் சாலையில் மழைதண்ணீர் தேங்காமல் இருக்க மின்சார வாரியம், மாநகராட்சி, ரெயில்வே, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய அலுவலர்களை கொண்டு வடிகால் பணிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (இன்று) நடைபெற உள்ளது.

8 வழிச்சாலை திட்டம்

சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவின் தலைவர் திருப்புகழ் தலைமையிலான குழுவினர் அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையில் இந்த திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும்பட்சத்தில் முதல்-அமைச்சர் அறிவுரையின் பேரில் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை சட்டக்கல்லூரி விடுதி வளாக பின்புறத்தில் காலியாக உள்ள இடத்தை பார்வையிட்டார். அந்த இடத்தில் சாலையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக புதிய குடியிருப்பு கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்பின்னர் அவர், சிதிலமடைந்த நிலையில் உள்ள சவுகார்பேட்டை சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார். இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்துவிட்டு இங்கு பதிவுத்துறை அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், போலீஸ் நிலையம் மற்றும் பிற துறைகளுக்கு கட்டிடம் கட்ட மதிப்பீடு தயார் செய்து வழங்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story