2 அமைச்சர்களுக்கு கொரோனா திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று


2 அமைச்சர்களுக்கு கொரோனா திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று
x
தினத்தந்தி 21 Jan 2022 9:52 PM GMT (Updated: 2022-01-22T03:22:20+05:30)

தமிழகத்தில் 2 அமைச்சர் களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனனும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல், சளி அதிகமாக இருந்தது. உடனே சுகாதார குழுவினர் அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பினர்.

இந்த பரிசோதனை முடிவில் அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், குன்னூர் அருகே இளித்தொரை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

அமைச்சர் மூர்த்தி

இதேபோல தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்டு வந்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது.

எனவே அமைச்சர் மூர்த்தி, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் மூர்த்தி தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். ஏற்கனவே 2 தடுப்பூசியும் செலுத்தி இருக்கிறார். மதுரை மாவட்டத்தில் நடந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை தலைமை தாங்கி நடத்தினார். இந்தநிலையில்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்றஅ.தி.மு.க. உறுப்பினராக இருப்பவர் அர்ஜூனன் (வயது 51). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story