பொங்கல் தொகுப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


பொங்கல் தொகுப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Jan 2022 9:59 PM GMT (Updated: 2022-01-22T03:29:47+05:30)

பொங்கல் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.1,250 கோடி மதிப்பிலான மளிகை பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தி.மு.க. அரசால் வழங்கப்பட்டன. பொங்கல் தொகுப்பில் இருந்த பெரும்பாலான மளிகை பொருட்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றது என்றும், இதில் உள்ள பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்றும் பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. நடுநிலையாளர்கள், தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசியவர்கள்கூட இந்த விஷயத்தில் தி.மு.க.வை விமர்சித்தனர்.இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருட்களை வினியோகம் செய்தால், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருட்களை வினியோகம் செய்தால், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை வினியோகம் செய்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோல் உள்ளது.

ரூ.1,250 கோடி வீண்

மக்களுக்கு நல்ல தரமான பொருட்களை வாங்கி வழங்கவேண்டும் என்பதில் அ.தி.மு.க. முனைப்பு காட்டியது என்பதும், தி.மு.க. தரமற்ற, மட்டமான பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்ற ஆர்வம் காட்டியது என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட பொருட்கள் குறித்து தி.மு.க. உள்பட யாரும் எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு குறித்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து முதல்-அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் விவாதிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், தவறு நடந்து இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பயனுள்ளதாக அமைந்தன. தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பொருட்கள் எதுவுமே மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்கள் அந்த பொருட்களை பயன்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. மொத்தத்தில் மக்களின் பணம், அரசினுடைய பணம் கிட்டதட்ட ரூ.1,250 கோடி வீணடிக்கப்பட்டு விட்டது.

வெள்ளை அறிக்கை

தேர்தலின்போது வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஏமாற்றியதைப்போல, தரமற்ற பொருட்களை, எடை குறைவான பொருட்களை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம், மக்கள் எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள் என்று தி.மு.க. நினைத்திருக்கக்கூடும். அதனுடைய விளைவுதான் ரூ.1,250 கோடி மக்கள் பணம் வீணடிப்பு. எனவே, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் யாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன? ஒரே பொருள் இரண்டு, மூன்று நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதா? அப்படி என்றால் ஏன் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டது? தமிழ்நாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் கலந்து கொண்டதா?

கலந்துகொண்டது என்றால் எந்தெந்த நிறுவனங்கள் கலந்து கொண்டன? அவர்கள் குறிப்பிட்ட விலை என்ன? பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்த நிபந்தனைகள் ஒப்பந்த புள்ளியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? தரம் மற்றும் எடை பரிசோதனை செய்யப்பட்டதா? தரமற்ற, மட்டமான பொருட்களை வினியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது? இன்னும் எவ்வளவு கொடுக்கவேண்டும்? என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட, முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story