பிப்ரவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு


பிப்ரவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு
x
தினத்தந்தி 22 Jan 2022 12:27 AM GMT (Updated: 2022-01-22T05:57:37+05:30)

அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் ஆன்லைனில் ஒரே மாதிரியாக நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதில் சில முறைகேடுகள், குளறுபடிகள் அரங்கேறிய புகார்களும் எழுந்தன. அதனை சரிசெய்து மாணவர்களுக்கு அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதனைத்தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து, ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்த வகுப்புகளை நேரடி வகுப்புகளாக அறிவிக்கப்பட்டு, மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு வரவழைக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதேபோல், செமஸ்டர் தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) முறையிலேயே நடத்தப்படும் என்ற அறிவிப்பை உயர்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் சில மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு

மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஆப்லைன் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக, கால அவகாசம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்றும் திட்டவட்டமாக அப்போது தெரிவித்தது. அதற்கேற்றாற்போல், மாணவ-மாணவிகளை நேரடி வகுப்புகளுக்கு வரவழைத்து, ஆப்லைன் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தமிழகத்தில் உயரத்தொடங்கியது. இதனை தடுக்க, தமிழகத்தில் தற்போது 31-ந்தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளித்ததோடு, கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த ஆப்லைன் செமஸ்டர் தேர்வையும் ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளுக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ளும் வகையில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வரும் சூழ்நிலையில், ஏற்கனவே ஆப்லைன் மூலம் மட்டுமே செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று இருந்த அறிவிப்பை மாற்றி, தற்போது ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆன்லைனில் நடத்த முடிவு

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலில் கல்லூரி மாணவர்களுக்கு ஆப்லைனில் தான் தேர்வு நடக்கும் என்று அறிவித்தோம். ஆன்லைனில் நடக்காது என்று கூறினோம். ஆனால் இன்றைய சூழ்நிலையில், ஆப்லைனில் தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. மேலும் ஆப்லைனில் தேர்வு நடத்துவதற்கு காத்திருந்தால், தேர்வு நடத்த வெகுநாட்கள் காத்திருக்கவேண்டும் என்பதால், முதல்-அமைச்சரின் ஒப்புதலோடு, செமஸ்டர் தேர்வுகளை மட்டும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஆன்லைனில் நடத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் என்ஜினீயரிங், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளில் குளறுபடிகள் எதுவும் இல்லாமல் ஒரே மாதிரியாக தேர்வு நடத்துவது என்றும், அந்த தேர்வுகளை பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதனைத்தொடர்ந்து அப்போது இருக்கிற கொரோனா தொற்று சூழலுக்கு ஏற்ப, கல்லூரிகளை ஆன்லைனிலோ அல்லது நேரடி வகுப்புகளாகவோ தொடர்ந்து நடத்துவது பற்றி தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுக்கும் முடிவின் அடிப்படையில், அறிவிக்கப்படும்.

வினாத்தாள்

அதேநேரத்தில், வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கும் இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடியாகத்தான் நடத்தப்படும். அப்போது தொற்று இருந்தால்கூட, தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, நேரடியாக மட்டுமே தேர்வு நடக்கும். ஏனென்றால் கல்வித்தரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும் நாம் இருக்கிறோம். ஆன்லைன் தேர்வு சரியான வழியில் நடத்துவதற்கு ஏதுவான அனைத்து நடவடிக்கைகளையும் உயர்கல்வித்துறை எடுக்கும். அதற்கு மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கை, அவர்களின் மனநிலையை அறிந்து, முதல்-அமைச்சரின் முடிவுக்கு ஏற்ப, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளில் எந்த அளவுக்கு படித்தார்களோ? அதற்கேற்றாற்போல் வினாத்தாள் அமைக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதி, அதனை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் கடந்த முறை எழுந்தது. அதனை தாமதமாக அனுப்புவதற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறோம்.

தரம் உயர்த்தப்படும்

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரி முதல்வர்களையும் அழைத்து, சென்னை பல்கலைக்கழகத்தின் தரத்தை மீண்டும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், ஆலோசனைகளை வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) மேற்கொள்ள இருக்கிறோம். நிச்சயம் சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்தப்படும். உயர்கல்வி மன்றங்கள் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்த பணிகள் கல்வியாளர்கள் மூலம் நடந்து வருகிறது. தமிழக வரலாற்றின் சில தகவல்கள் நம்முடைய பாடத்திட்டங்களில் இல்லை. அதனை கொண்டுவருவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைனில் தேர்வு எழுதும் 20 லட்சம் மாணவர்கள்

கொரோனா தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த ஆப்லைன் செமஸ்டர் தேர்வு முறையை மாற்றி, கடந்த செமஸ்டரில் நடத்தப்பட்டது போன்று ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகளில் படிக்கும் 12 லட்சத்து 94 ஆயிரத்து 051 மாணவ-மாணவிகளும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் 52 ஆயிரத்து 301 பேரும், அனைத்து வகை என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் 4 லட்சத்து 57 ஆயிரத்து 196 மாணவ-மாணவிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 331 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் இந்த செமஸ்டர் தேர்வை எழுத இருக்கின்றனர். இதுதவிர அரியர் மாணவர்களும் இந்த தேர்வை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story