தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பில் உயிரிழக்கின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 6:04 AM GMT (Updated: 2022-01-22T11:34:21+05:30)

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும்விதமாக சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தியது. இந்த தடுப்பூசி முகாம், பலர் தடுப்பூசி போட உதவியாக இருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அந்த வகையில் கடந்த 8-ந் தேதி 18-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த சூழலில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 19-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை; தைரியமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சென்னையில் 1600 இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மேலும்,15-18 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,580 ஊராட்சிகளில் 100% ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் 94.19% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும்,1,71,616 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 6% பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மீதம் உள்ள 94% சதவீதம் பேர் வீட்டுத்தனிமையில் இருக்கின்றனர். மேலும், தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீதம் மிக்குறைவாக இருப்பது மன நிறைவாக உள்ளது. எனினும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் தான் தற்பொழுது இறப்பு விகிதம் ஏற்படுகிறது.

மாறாக,தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே, தைரியமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதே சமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

Next Story