தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என முதல்-அமைச்சர் கூற முடியுமா? - குஷ்பு கேள்வி


தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என முதல்-அமைச்சர் கூற முடியுமா? - குஷ்பு கேள்வி
x
தினத்தந்தி 23 Jan 2022 10:04 AM GMT (Updated: 2022-01-23T15:34:15+05:30)

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என முதல்-அமைச்சர் கூற முடியுமா என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவப் பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் குஷ்பு கூறியதாவது:-

எல்லோரின் வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். இழந்தவர்களுக்கு மட்டும்தான் வலியும் வேதனையும் தெரியும். இதுவரை இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?  மதம் மாற்றம் குறித்து இறந்த குழந்தையே வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் இதுவரை ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. 

இதுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் எங்கே? அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்றால் அந்த குழந்தை பேசியது பொய்யா?  சிறுமியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். 

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிடுவாரா? என கேள்வி எழுப்பினார். தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story