4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்


4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 Jan 2022 6:49 PM GMT (Updated: 23 Jan 2022 6:49 PM GMT)

கழுத்தை இறுக்கியும், மூச்சை திணறடித்தும் 4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. இவருடைய மகன் ஜோகன் ரிஷி (வயது 4) என்பவனை, 1½ பவுன் நகைக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா (30) என்பவர் கொலை செய்து பீரோவுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாத்திமாவை கைது செய்தனர். அதே சமயத்தில் பாத்திமாவின் கணவர் சரோபினையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இந்தநிலையில் கைதான பாத்திமா, சிறுவனை கொன்றது ஏன்? என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது, பாத்திமா குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அடைக்க முடியாமல் அவர் சிரமப்பட்டுள்ளார். இதனால் கடன் கொடுத்த பெண், பாத்திமாவுக்கு நெருக்கடி கொடுத்தார். மேலும் பணம் தராவிட்டால் உன்னுடைய வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டலுக்கு பயந்த அவர் பணத்தை உடனடியாக திரட்டுவது எப்படி? என்று யோசித்தபடி இருந்துள்ளார். நமக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே இதற்கு மாற்று வழி என்ன? என நினைத்து கொண்டிருந்த போது, வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனிடம் நகையை பறித்தார்.

கொடூர கொலை

பின்னர் சிறுவனின் வாயை துணியால் கட்டி சத்தம் போடாதபடி செய்தார். பிறகு கை, கால்களை கட்டிய அவர், கழுத்தை கயிறால் இறுக்கி உள்ளார். பாதி உயிர் போன நிலையில், சிறுவனின் முகத்தில் தலையணையை போட்டு அதில் அவர் உட்கார்ந்து கொண்டார். பாத்திமாவின் ஈவு, இரக்கமற்ற கொலை வெறியில் சிறுவன் துடிதுடித்து இறந்தான்.

பின்னர் கொலையை மறைக்க அவர் திட்டமிட்டார். இதற்காக பீரோவுக்குள் உடலை வைத்து பூட்டினார். இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனின் உடலை கடலில் வீசி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் நாடகமாட முடிவு செய்திருந்தார். ஆனால் இரவில் சிறுவனின் உறவினர்கள் வெளியே நின்றிருந்ததால் அவருடைய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

கணவரும் கைது

இந்தநிலையில் மறுநாள் காலையில் சிறுவனிடம் பறித்த நகையை ஒரு வங்கியில் அடமானம் வைத்து பாத்திமா பணம் பெற்றார். இதனை அறிந்த போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு பாத்திமா வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதற்கிடையே கொலையை மறைக்க உதவியதாக பாத்திமாவின் கணவர் சரோபினையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story