ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகாவிற்கு உரிமை இல்லை ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை


ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகாவிற்கு உரிமை இல்லை ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
x
தினத்தந்தி 23 Jan 2022 10:18 PM GMT (Updated: 23 Jan 2022 10:18 PM GMT)

ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கர்நாடகாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவை நனவாக்கியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. முதன்முதலில் 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து1994-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 2-வது முறையாக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவை 18-08-2005 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கண்டனம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பை தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரும் தீர்மானம் 27-03-2008 மற்றும் 01-04-2008 அன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 ஆண்டுகளில் வெறும் 18 சதவீத பணிகளே முடிவடைந்த நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 82 சதவீத பணிகளை முடித்து இந்த திட்டத்தை 29-05-2013 அன்று காணொலி காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தவர் ஜெயலலிதா. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட முழு காரணமானவர் ஜெயலலிதாவும், அ.தி.மு.க. ஆட்சியும் தான்.

தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஆதரவு

காவிரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரை கூட திறந்து விட மறுப்பதையும், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story