ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 9,494 காலியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 9,494 காலியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 23 Jan 2022 11:16 PM GMT (Updated: 23 Jan 2022 11:16 PM GMT)

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. 9 ஆயிரத்து 494 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) ஆசிரியர் தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தி வருகிறது.

அந்த வகையில் எந்தெந்த பணியிடங்களுக்கு எப்போது அறிவிப்பு வெளியிடப்படும்? அவர்களுக்கான தேர்வு எப்போது நடத்தப்படும்? என்பது போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி, 9 ஆயிரத்து 494 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஏப்ரல் 2-வது வாரத்தில் தகுதித்தேர்வு

அதில் முதலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணைப்படி, 2 ஆயிரத்து 407 உதவி பட்டதாரி பணியிடங்களுக்கு பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திலும் நடைபெற உள்ளது.

3 ஆயிரத்து 902 மேல்நிலை ஆசிரியர்கள் மற்றும் 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், 167 மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் அறிவிப்பாணை மே மாதத்திலும், அதற்கான தேர்வு ஜூன் மாதம் 2-வது வாரத்திலும் நடக்க இருக்கிறது.

அரசு கலைக் கல்லூரி, கல்லூரி கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள 1,334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ஆகஸ்டு மாதத்திலும், அவர்களுக்கான தேர்வு நவம்பர் மாதம் 2-வது வாரத்திலும் நடத்தப்பட உள்ளது.

அதேபோல், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருக்கும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தற்காலிக அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.

Next Story