மோடி புகைப்படம் வைத்த விவகாரம்: பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறியதாக பா.ஜனதா நிர்வாகி கைது


மோடி புகைப்படம் வைத்த விவகாரம்: பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறியதாக பா.ஜனதா நிர்வாகி கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 8:20 PM GMT (Updated: 2022-01-25T01:50:34+05:30)

கோவை அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து மோடி புகைப்படத்தை மாட்டிய வழக்கில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு கடந்த 22-ந் தேதி பா.ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் பா.ஜனதாவினர் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அந்த அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படத்தை மாட்டினார்கள். இதை பார்த்த பேரூராட்சி செயல் அலுவலர் ரெங்கசாமி, அவர்களிடம் அலுவலகத்துக்குள் அனுமதி இல்லாமல் புகுந்து புகைப்படம் மாட்டுவது தவறு, அத்துடன் முககவசம் அணியாமல் உள்ளே வரக்கூடாது என்று கூறி உள்ளார்.

மோடி புகைப்படம்

அதற்கு பா.ஜனதா நிர்வாகிகள், இந்த அலுவலகத்தில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் படங்கள் மட்டும் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பிரதமர் மோடி புகைப்படம் மட்டும் ஏன் வைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

அத்துடன் அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க அரசு உத்தரவு உள்ளதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ஜனதா நிர்வாகி கைது

இதுகுறித்து செயல் அலுவலர் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல் ஆகிய 3 பிரிவின் கீழ் பா.ஜனதா நிர்வாகி பாஸ்கரன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பாஸ்கரனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story