கொள்முதல் செய்ய தாமதம்: நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்


கொள்முதல் செய்ய தாமதம்: நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2022 8:36 PM GMT (Updated: 24 Jan 2022 8:36 PM GMT)

கொள்முதல் செய்ய அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக கூறி நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், இலந்தைகுளம், தைலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 7,400 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது இங்கு அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல் மூட்டைகளை விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே நெல் கொள்முதலுக்கு பட்டா வேண்டும், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யாமல் இருந்ததாக கூறி ஆத்திரம் அடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி வத்திராயிருப்பு-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைக்கு கொண்டு வந்தனர்.

வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன்பு நெல் மூடைகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வத்திராயிருப்பு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே நெல் கொள்முதல் செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விவசாயிகளை, வருவாய்த்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பட்டா விதிமுறையை தளர்த்தாததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை வருவாய்த்துறை அலுவலகத்தின் முன்பு அடுக்கி வைத்து விட்டு சென்றனர்.

Next Story