‘தடுப்பூசியை கொண்டு கொரோனாவை வதம் செய்ய வேண்டும்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


‘தடுப்பூசியை கொண்டு கொரோனாவை வதம் செய்ய வேண்டும்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 24 Jan 2022 8:53 PM GMT (Updated: 24 Jan 2022 8:53 PM GMT)

‘வேல் கொண்டு முருகன் சூரனை வதம் செய்தது போல், நாம் தடுப்பூசியை கொண்டு கொரோனாவை வதம் செய்ய வேண்டும்’, என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை,

சென்னையில் புகழ்பெற்ற முருகன் கோவிலான வடபழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 23-ந்தேதி காலை 10.30 மணி அளவில் கும்பாபிஷேகமும், அன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் வெகுவிமர்சையாக நடந்தது. தொடர்ந்து நேற்று மண்டல பூஜை தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. மாறாக பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் காண்பதற்காக டி.வி. மற்றும் இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை நேரில் காண முடியாத பக்தர்கள் நலன் கருதி சாமி தரிசனத்திற்காக, நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பக்தர்கள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முககவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தபடி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பு ஏற்பாடுகள்

பக்தர்கள் நலன் கருதி நேற்றில் இருந்து தொடர்ந்து 4 நாட்களுக்கு சிறப்பு பூஜை கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. வடபழனி கோவில் சன்னதியில் இருந்து கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி கோவிலுக்கு முன்பு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

கவர்னர் சாமி தரிசனம்

தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அவருடைய கணவர் டாக்டர் சவுந்தரராஜனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறி வருகிறது என்று கூறுகிறார்கள். எனவே சமூக பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும். வேல் கொண்டு முருகன் சூரனை வதம் செய்ததுபோல், நாம் தடுப்பூசியை கொண்டு கொரோனாவை வதம் செய்ய வேண்டும். இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவது மாபெரும் இயக்கமாக மாறி உள்ளது. இந்தியாவில் தற்போது வரை 160 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story