மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு நாளை மறுதினம் கலந்தாய்வு தொடங்குகிறது


மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு நாளை மறுதினம் கலந்தாய்வு தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Jan 2022 12:07 AM GMT (Updated: 25 Jan 2022 12:07 AM GMT)

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இந்த படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை,

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்து 349 இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 650 இடங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அரசு கல்லூரியில் 200 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 1,760 இடங்கள் என மொத்தம் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி ஜனவரி 7-ந் தேதி வரை ‘ஆன்லைன்’ மூலம் பெறப்பட்டன.

இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த தகுதியான மாணவ-மாணவிகளின் தர வரிசை பட்டியல் 24-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று அவர் வெளியிட்டார். மேலும் அவர், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் பெயர் பட்டியலையும், முதல் 10 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பெயர்களையும் வெளியிட்டார்.

அப்போது தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கூடுதல் இயக்குனர் டாக்டர் வசந்தா மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

தரவரிசை பட்டியல்

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2021-22-ம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 7,825. அதில் மாநில அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 6 ஆயிரத்து 999. அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் 1,960. இதில் மாநில அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 1,930 ஆகும்.

அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு (பொதுப்பிரிவு) மொத்தம் 25 ஆயிரத்து 595 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 16 ஆயிரத்து 74 மாணவர்கள், 8 ஆயிரத்து 875 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 949 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 16 ஆயிரத்து 29 மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்திலும், 8 ஆயிரத்து 543 மாணவர்கள் மத்திய அரசின் கல்வி திட்டத்தின் (சி.பி.எஸ்.இ.) மூலமாகவும் படித்தவர்கள்.

சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 15 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 586 பேரும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 106 பேரும் படித்தவர்கள்.

கலந்தாய்வு

மருத்துவ படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதியும் (நாளை மறுதினம்), 28, 29-ந் தேதிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 30-ந் தேதி முதல் ‘ஆன்-லைன்’ (www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net) மூலம் தொடங்கி நடைபெற உள்ளது. ‘ஆன்லைன்’ கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி என்பது குறித்து மாணவ-மாணவிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வீடியோ பதிவு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது விரைவில் வெளியிடப்படும்.

இந்த வழிகாட்டு நெறிமுறை களை படித்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story