தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க ஐகோர்ட்டு மறுப்பு


தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 12:30 AM GMT (Updated: 25 Jan 2022 12:30 AM GMT)

5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

உள்ளாட்சி தேர்தல்

கொரோனா வைரஸ்பரவல் 3-வது அலை தீவிரமாகி உள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய ஓய்வு பெற்ற இணை இயக்குனர் டாக்டர் நக்கீரன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்தநிலையில், இதே கோரிக்கையுடன், சென்னை மருத்துவ கல்லூரி பொது அறுவை சிகிச்சை பிரிவு ஓய்வு பெற்ற இயக்குனர் டாக்டர் பாண்டியராஜ்உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

30 ஆயிரம் கட்டுப்பாட்டு பகுதிகள்

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் நக்கீரன் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

மூத்த வக்கீல்;- உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அவகாசம், வருகிற 27-ந் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், கொரோனா பரவலின் மாநில நிலவரத்தின் அடிப்படையில், இதுபோன்ற வழக்கில் அந்தந்த மாநில ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தற்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. அதுவும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 3-வது அலை தீவிரமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்ல தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் தேர்தலை எப்படி நடத்த முடியும்?.

சமூக பரவல்

நீதிபதிகள்:- உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக ஐகோர்ட்டு எப்படி உத்தரவிட முடியும்?

மூத்தவக்கீல்:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும், மாநிலத்தில் நிலவும் நிலவரம் அந்தந்த மாநில ஐகோர்ட்டுக்குத்தான் தெரியும்.

நீதிபதிகள்:- தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் இறங்குமுகமாக உள்ளது என்று கூறப்படுகிறதே?.

மூத்த வக்கீல்:- இல்லை. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. தற்போது கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது. அதேநேரம், பலர் கொரோனா பரிசோதனையே செய்யாமல் உள்ளனர்.

தள்ளிவைக்க முடியாது

நீதிபதிகள்:- பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெற உள்ளது.

மூத்த வக்கீல்:- இந்த சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு பதில் 2 மாதங்களுக்குதள்ளிவைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள்:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ளதால், இதை மீறி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளன. அதேநேரம், கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடித்து தேர்தலை நடத்த உத்தரவிடலாம். இல்லையென்றால், மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மற்ற மனுதாரர்கள் தரப்பு வாதத்துக்காக இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story