பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டு!


பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டு!
x
தினத்தந்தி 25 Jan 2022 2:08 AM GMT (Updated: 2022-01-25T07:38:03+05:30)

பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வழங்கிய 314 கோவில்களுக்கு இந்திய உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனம் தர சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை, 

பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வழங்கிய 314 கோவில்களுக்கு இந்திய உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனம் தர சான்றிதழ் வழங்கியுள்ளதை தொடர்ந்து, கோவில்களின் செயல் அலுவலர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அன்னதான திட்டம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி தண்டாயுதபாணிசாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 கோவில்களில் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனம், நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கிடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியை செய்து வருகிறது. இந்நிறுவனம் மத வழிபாட்டுத்தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து கடவுளுக்கு சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

314 கோவில்களுக்கு தர சான்றிதழ்

கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் தயாரிக்கப்படுவதை பரிசோதனைக்கு உட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 கோவில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் சீரிய முயற்சியால் 308 கோவில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 440 கோவில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டுத்தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் 314 கோவில்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.

மு.க.ஸ்டாலின் பாராட்டு

இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 கோவில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, கோவில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருத்தணி சுப்பிரமணியசாமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், சென்னை, தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர், திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர், திருப்போரூர் கந்தசாமி, மாமல்லபுரம் சயன பெருமாள், சென்னை அங்காள பரமேஸ்வரி அம்மன், கங்காதீஸ்வரர் ஆகிய கோவில்களின் இணை ஆணையர்-செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story