சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை


சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை
x
தினத்தந்தி 25 Jan 2022 3:29 AM GMT (Updated: 25 Jan 2022 3:29 AM GMT)

சென்னையில் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் கடந்த டிசம்பர் மாதம் 27ந்தேதி குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம் ஆயின. அந்த குடியிருப்பில் உள்ள 336 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.கட்டிட விரிசலை கண்டு மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.  

அங்கிருந்த ஒரு பிளாக்கில் 24 குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. எனவே மீதமுள்ள 62 திட்டங்களுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 734 குடியிருப்புகளை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது என்று தமிழ்நாடு நகர்ப்புற வசிப்பிட மேம்பாட்டு வாரியத்தின் (குடிசை மாற்று வாரியம்) மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்தராவ் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர நிலை கருதி, தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுக்களை வாரியம் நியமிக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 குழுக்களிலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிந்து விழுந்த கட்டிடம் மற்றும் குடியிருப்பில் உள்ள மற்ற கட்டிடங்களை அண்ணா பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் கட்டிடவியல் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மண்ணியல் வல்லுனர் குழுவினர் பேராசிரியை முத்தாரம் தலைமையில், ஸ்டாலின், கோப்பெருந்தேவி உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் குடியிருப்பு வளாகத்தில் மணலின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

கட்டிட இடிபாடுகளிலிருந்து பெறப்பட்ட மணல் மாதிரியை ஆய்வுக்குழுவினர் ஆய்விற்காக உடன் எடுத்து சென்றனர். இவர்கள் தங்களுடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அதன்படி, ஆய்வறிக்கையின் முடிவில், சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story