பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு


பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2022 11:53 AM GMT (Updated: 2022-01-25T17:23:03+05:30)

பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.

ரவுடி குணா மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் என 24 வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார்.  காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டதாகவும் குணா மீது புகார் உள்ளது.

முன்னதாக, குணாவை எண்கவுண்ட்டர் செய்யும் திட்டம் இல்லை என்று போலீஸ் தர்ப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குணா சரணடைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி படப்பை குணா இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.  இதனை தொடர்ந்து, பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதனையடுத்து படப்பை குணா, பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


Next Story