தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை மாமண்டூர் பயணவழி ஓட்டலில் அரசு பஸ்கள் நிற்க தடை


தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை மாமண்டூர் பயணவழி ஓட்டலில் அரசு பஸ்கள் நிற்க தடை
x

தரமற்ற உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாமண்டூர் பயண வழி ஓட்டலில் அரசு பஸ்கள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலை பெறுவதாக, போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு வரபெற்ற புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு (விழுப்புரம்) சொந்தமான சேலம் ஸ்டார் அசோசியேட்ஸ் என்ற ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கழக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உணவு சுகாதாரமின்றி, தரமற்றதாக உள்ளது எனவும், அனைத்து உணவு பொருட்களும் விற்பனை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, மேற்கண்ட குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்து, விவரத்தை தெரிவிக்குமாறு புகார் அறிக்கை சேலம் ஸ்டார் அசோசியேட்ஸ் ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

அரசு பஸ்கள் நின்று செல்ல தடை

அதனைத் தொடர்ந்து மீண்டும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 20-1-2022 அன்று கழக அலுவலர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்குவது, விற்பனை விலையை விட அதிகம் விற்பனை செய்தது மற்றும் உணவுக்கூடம் சமையலறை, மற்ற வளாகங்கள் சுகாதார சீர்கேடான நிலையில் உள்ளதை கண்டறிந்து 21-1-2022 அன்று மீண்டும் புகார் அறிக்கையை அதே நிறுவன ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் 25-1-2022 அன்று விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் தலைமையில், அலுவலர்கள் ஆய்வு மேற்கண்ட போது, அந்த உணவகம் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாத நிலை கண்டறியப்பட்டு, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் 25-1-2022 காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் ரத்து

மேலும், உடனடியாக அந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அரசு பஸ்கள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். தரம் குறைவான உணவு மற்றும் கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story