நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2022 11:24 PM GMT (Updated: 25 Jan 2022 11:24 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து உத்தரவிட முடியாது என்றும், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டை மனுதாரர்கள் அணுகலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று டாக்டர் நக்கீரன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர்.

வீடு, வீடாக பிரசாரம்

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்த விவரம் பின்வருமாறு:-

மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன்:- கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் தெருக்கள் மூடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் எப்படி வாக்களிப்பார்கள்? இந்த நிலையில் தேர்தலை நடத்துவது பொதுமக்களின் உயிருடன் விளையாடுவது போன்றதாகும்.

மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்:- கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில். வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் பிரசாரம் செய்வார்கள். அதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும்.

அரசுக்கு தெரியும்

மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன்:- பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தால் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் இருக்குமா? அதே நிலைதான் தற்போதும் நிலவுகிறது. எனவே, மாநில தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருக்கலாம்.

மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன்:- தமிழகத்தில் கொரோனா தொற்றின் விவரங்களை இந்த ஐகோர்ட்டு எங்களிடம் கேட்கிறது. ஆனால், நாங்கள், தமிழக அரசு வெளியிடும் அறிக்கையின் அடிப்படையில்தான் வாதம் செய்கிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் தமிழக அரசுக்குத்தான் முழுமையாக தெரியும். ஆனால், இதுவரை தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் எந்த பதிலும் தெரிவிக்காமல் உள்ளது.

தேர்தல் நடத்தப்படும்

நீதிபதிகள்:- உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில அரசிடம், தேர்தல் ஆணையம் விவாதித்ததா?

அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்:- பொதுவாக மாநில அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு வாதம் நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உத்தரவிட முடியாது

ஏற்கனவே, 5 ஆண்டுகள் முன்பு நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் சில காரணங்களால் நடத்தப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தேர்தலை தள்ளிவைத்து இந்த ஐகோர்ட்டினால் உத்தரவிட முடியாது.

எனவே, தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம். ஏற்கனவே தேர்தல் நடத்த கொரோனா தடுப்பு விதிகளை கடந்த டிசம்பர்10-ந் தேதியே மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலை தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையம் எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள், தனிமனித விலகல் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றை முறையாக அரசும், தேர்தல் ஆணையமும் பின்பற்ற வேண்டும்.

அரசுக்கு பாராட்டு

தேர்தலை தள்ளிவைக்கக்கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அதேநேரம், தேர்தல் நடவடிக்கையில் விதிமீறல் இருந்தால் இந்த ஐகோர்ட்டு கவனத்துக்கு மனுதாரர்கள் கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்கு பின் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story