‘அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுகிறது' அண்ணாமலை பேட்டி


‘அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுகிறது அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 26 Jan 2022 7:50 PM GMT (Updated: 26 Jan 2022 7:50 PM GMT)

அ.தி.மு.க. ஒரு எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும், நயினார் நாகேந்திரன் கூறிய வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது என்றும் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

குடியரசு தின விழாவையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலை மற்றும் தமிழன்னை சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவன் விநாயகம், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், வர்த்தகரணி துணைத் தலைவர் சி.ராஜா, மீனவர் அணி செயலாளர் செம்மலர் சேகர், நடிகர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.பி.ஐ. விசாரணை

நிகழ்ச்சியின்போது, அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவி லாவண்யா மரணத்தில், ஒரு சாதாரண மனிதர் லாவண்யாவிடம் கடைசியாக பதிவு செய்த வாக்கு மூலத்தை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளோம். காவல்துறையும் அது லாவண்யாவின் குரல் தான் என்று ஒத்துக் கொண்டு உள்ளது. அதைத் தான் மதுரை ஐகோர்ட்டும் கூறியிருக்கிறது.

மேலும், கடந்த 2 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக அந்த பள்ளியில் என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது லாவண்யாவின் பெற்றோருக்கு மட்டும்தான் தெரியும். ஒரு குழந்தை இறந்த பிறகு பொய் சொல்ல வேண்டிய அவசியம் எந்த பெற்றோருக்கும் இருக்காது. எனவே, இந்த விஷயங்களின் மூலம் லாவண்யா பொய் சொல்லவில்லை என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இது குறித்து தஞ்சை மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவர் கூறியிருக்கும் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

லாவண்யா மரணத்தின் உண்மை வெளிவர வேண்டுமானால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

நயினார் நாகேந்திரன் பேச்சு

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதில் வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது.

அதற்காக வருத்தம் தெரிவிக்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டபோது அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

வருத்தம் தெரிவித்தேன்

அதைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தேன்.

அ.தி.மு.க. மீது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய கடமை உள்ளது. நமது ஆட்சியின் 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் முக்கியமான அனைத்து கஷ்டங்களிலும் அ.தி.மு.க.வானது பா.ஜ.க.வுடன் துணை நின்றது. மக்களவை, மாநிலங்களவைகளில் பா.ஜ.க.வுக்காக குரல் கொடுத்து நமது தேசத்துக்கு தேவையான முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும்போது எல்லாம் நம்மோடு நின்றிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. சிறப்பாக செயல்படுகிறது

எல்லாவற்றையும் தாண்டி, அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவு இயற்கையான ஒன்று. இந்த உறவில் எந்த காரணத்திலும் சின்ன சின்ன சலனங்கள் கூட வரக்கூடாது என்பது 2 கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு. அதே போன்று, அ.தி.மு.க. ஒரு எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story