தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 அசாம் வாலிபர்கள் கைது


தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 அசாம் வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 9:53 PM GMT (Updated: 2022-01-27T03:23:48+05:30)

பெரும்பாக்கத்தில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 அசாம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் தனியார் கட்டுமான பணியில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சாப்பாட்டிற்கு பணம் தரவில்லை எனக்கூறி அங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய அசாம் மாநிலத்தை சேர்ந்த உமேஷ் (வயது 22) என்பவரை கொலை செய்ததாக சக தொழிலாளிகளான சிவம் நாயக் (26), பிஜய் நாயக் (24), ஜோரா முண்டா (25), சஞ்சய் குவாலா (21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4 பேரும் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

4 பேர் சிறையில் அடைப்பு

இதையடுத்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் குமார் மேற்பார்வையில் பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, போலீஸ்காரர் ஷேக் முஸ்தாக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் அசாம் மாநிலம் சென்று அங்கு பதுங்கி இருந்த பிஜய் நாயக், ஜோரா முண்டா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் பகுதியில் இருந்த சஞ்சய் குவாலா, சிவம் நாயக் ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

4 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 4 பேரை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் ரவி பாராட்டினார்.

Next Story