கொரோனா தொற்று குறையும்பட்சத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை


கொரோனா தொற்று குறையும்பட்சத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை
x
தினத்தந்தி 26 Jan 2022 10:00 PM GMT (Updated: 26 Jan 2022 10:00 PM GMT)

கொரோனா தொற்று குறையும்பட்சத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

சென்னை,

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. அதனை இன்னும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். அரசு பள்ளி பெருமையின் அடையாளமாக மாற்றுவதற்கான திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் அரசு பள்ளிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடைய தலைமையில் நடக்கும் இந்த ஆட்சியில், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான அனைத்து வழிகளிலும் எங்கள் செயல்பாடு இருக்கும்.

நீட் தேர்வு தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார். அதேதான் பள்ளிக்கல்வித் துறையின் கோரிக்கையாகவும் இருக்கிறது. நம்முடைய கொள்கை இருமொழி கொள்கை தான். அதில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை. நம்முடைய நிலைப்பாடு மாறாது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம். வருகிற 31-ந்தேதிக்கு முன்பு ஊரடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு கருத்தையும் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.

அதாவது, நோய்த் தொற்று குறைகின்ற பட்சத்தில், பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அந்த ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி பேசி, ஒரு முடிவு எடுப்பார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story