தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை: காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை: காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:51 PM GMT (Updated: 27 Jan 2022 6:51 PM GMT)

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்.

மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு கடிதம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்குவதற்கு அதிகபட்சமாக ஒரே ஒரு பகல் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், எப்போதுமே தமிழகத்தை ஆளும் கட்சிக்கு கைப்பாவையாகத்தான் செயல்படும் எனும்போது இவற்றையெல்லாம் சமாளித்துதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நாம் எதிர்கொண்டாக வேண்டும், வெற்றிகளை குவித்தாக வேண்டும்.

வில்லில் இருந்து விடுபட்ட அம்பு

அனைத்து பதவியிடங்களுக்கும் பா.ம.க. சார்பில் மாம்பழம் சின்னத்தில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் தயாரிக்க வேண்டும். தொண்டர்கள் 10 பேர் கொண்ட பல்வேறு குழுக்களாக, முககவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடித்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பது தான் நமது ஒற்றை இலக்கு. அதற்கான பிரசாரத்தை, மக்கள் சந்திப்பையும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். வில்லில் இருந்து விடுபட்ட அம்பு எவ்வளவு வேகமாக இலக்கை நோக்கி பறக்குமோ, அவ்வளவு வேகமாக, வெற்றிக்காக கடுமையாக உழைக்க, களத்தை நோக்கி விரைய தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story