பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்


பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:24 PM GMT (Updated: 27 Jan 2022 9:24 PM GMT)

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுவில் உள்ள அலுவலர்கள் மற்றும் போலீசார்களுக்கான பயிற்சி கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:-

பறக்கும் படை குழுக்கள்

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனுக்கள் எவ்வாறு பெறப்பட வேண்டும். சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல அலுவலகங்களில் நாளை(அதாவது இன்று) காலை 10 மணி முதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் அல்லது பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும், மண்டலத்துக்கு 3 குழுக்கள் என 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும். இந்த குழுவில் உதவி என்ஜினீயர், 2 போலீசார் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் உள்பட 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பறிமுதல் செய்யப்படும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி்ன்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, 200 வார்டுகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள பறக்கும் படை குழுவினருக்கான வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் த.செந்தில்குமார், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்களும், துணை கமிஷனர்களுமான விஷூமஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், உதவி கமிஷனர் பி.பெர்மி வித்யா, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story