மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து பள்ளி, கல்லூரிகள் 1-ந் தேதி திறப்பு + "||" + Cancellation of night curfew in Tamil Nadu from today onwards on the 1st of schools and colleges

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து பள்ளி, கல்லூரிகள் 1-ந் தேதி திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து பள்ளி, கல்லூரிகள் 1-ந் தேதி திறப்பு
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து ெசய்யப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ந் தேதி திறக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதுதவிர பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை


மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கொரோனா நோய்த்தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ-மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக, வழிகாட்டு நெறிமுறைகள் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் வழங்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வருகிற 1-ந்தேதி (பிப்ரவரி) முதல் 15-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் விவரம் வருமாறு:-

* சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவேண்டும்.

* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

* பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.

* அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.

* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 பேர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

* இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர்.

தியேட்டர்களில்50 சதவீதம் பேருக்கு அனுமதி

* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து தியேட்டர்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.

* அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

* அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் நீர் விளையாட்டுகளை தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன. அதன் விவரங்கள் வருமாறு:-

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

* தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-ந்தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* 28-ந்தேதி (இன்று) முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது. அதேபோல் வரும் ஞாயிற்றுக்கிழமை (30-ந்தேதி) முழு ஊரடங்கு கிடையாது.

தடுப்பூசி சான்று

இதுதவிர சில பொது அறிவுரைகள் வருமாறு:-

* இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

* கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யவேண்டும்.

* கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்கவேண்டும்.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்

நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுகின்றன. அதன் விவரங்கள் வருமாறு:-

* நோய்த்தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.

* வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், பின்வரும் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவேண்டும். இந்த நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

* மக்களாகிய உங்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட தளர்வுகள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திறப்பு

அரையாண்டு விடுமுறைக்குப்பிறகு ஜனவரி 3-ந்தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 6-ந்தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடந்தது. அதனைத்தொடர்ந்தும், நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது தடை செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தற்போது வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது பிப்ரவரி 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்கவும், தமிழை வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
2. தீக்குளித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் கொடுக்கப்படும்
தீக்குளித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்கவும், மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. 7 கார்கள், 22 ஜீப்புகள்: பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்கள்
7 கார்கள், 22 ஜீப்புகள்: பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4. கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘‘சென்னை-மாமல்லபுரம் இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும்’’ என்று நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
5. மருத்துவ மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழகத்தில் மருத்துவம்-பல் மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டேப்லெட்’ வழங்கினார்.