பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் தீர்ப்புக்காக வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது


பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் தீர்ப்புக்காக வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது
x
தினத்தந்தி 28 Jan 2022 9:12 PM GMT (Updated: 28 Jan 2022 9:12 PM GMT)

பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் நடந்தது. பின்னர் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அதே நீதிபதி முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி திருச்சியை சேர்ந்த ரோசரி என்பவர் சார்பில் இடையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

சி.பி.ஐ. விசாரணை தேவை

பின்னர் மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மாணவி தனது சித்தியிடம் பள்ளியில் மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர் விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்தபோது உறவினர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை யார் வேண்டுமானாலும் பெறலாம். அதன்படி இந்த வாக்குமூலம் சம்பந்தமாக போலீசாரிடம் புகார் கொடுத்தால், அதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். சைபர் கிரைம் விசாரணைக்காக செல்போன் உள்ளிட்ட சாதனங்களை சென்னைக்கு அனுப்பியுள்ளனர்.

போலீசாரின் விசாரணை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மத்திய புலனாய்வு அமைப்பு இந்த விவகாரத்தை விசாரித்தால்தான் உரிய தீர்வு கிடைக்கும் என மாணவியின் உறவினர்கள் விரும்புகின்றனர். எனவே இந்த வழக்கின் அனைத்து விசாரணையையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

64 சாட்சிகள்

அதன்பின் ஆஜரான அரசு தரப்பு வக்கீல், “மனுதாரரின் குற்றச்சாட்டுகளை ஆவணமாக தாக்கல் செய்யும்பட்சத்தில் உரிய பதில் அளிக்கப்படும். இந்த வழக்கு குறித்த போலீசாரின் விசாரணைக்கு, மாணவியின் உறவினர்கள், வீடியோ எடுத்த முத்துவேல் தரப்பில் ஒத்துழைக்க மறுக்கின்றனர். உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 64 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துவிட்டது. சென்னையில் இருந்து தடயஅறிவியல் அறிக்கை கிடைத்த உடன், வழக்கு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மதமாற்றம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற அவசியம் இல்லை” என வாதாடினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

பின்னர் பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரரின் மகள் நன்றாக படிக்கக்கூடியவர். அதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் நீண்டநாளாக பள்ளிக்கு வராமல் இருந்தபோதும், செல்போன் மூலம் அவரை பள்ளிக்கு வரவழைத்தோம். ஏற்கனவே இருந்த நோயால் அவதிப்பட்ட அவருக்கு பள்ளியில் உரிய சிகிச்சை அளித்து வந்தோம். மதமாற்றம் என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இல்லை. மாணவியின் சித்தியின் முரணான செயல்பாடுகள்தான் இந்த நிலைக்கு காரணம் என சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Next Story