கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி உறுதி


கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி உறுதி
x
தினத்தந்தி 28 Jan 2022 9:23 PM GMT (Updated: 28 Jan 2022 9:23 PM GMT)

கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம்(நேற்று முன்தினம்) ஊரடங்கு பற்றி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில் பள்ளி-கல்லூரிகள் பிப்ரவரி 1-ந் தேதி முதல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே அரசு கலைக்கல்லூரிகள், மற்ற கல்லூரிகளில் முதல் ஆண்டு பருவத்தேர்வு டிசம்பரில் நடத்துவதாக அறிவித்து இருந்தோம். ஆனால் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைத்தோம். தற்போது கல்லூரிகள் திறந்தாலும், இந்த தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட இருக்கிறது.

அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முதல் பருவத்தேர்வு, 3-ம் பருவத்தேர்வு, 5-ம் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். இதை மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே எழுதலாம். அதேபோல் 2, 4, 6-ம் பருவத்தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடக்கும்.

அந்த தேர்வுகள் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் அப்போதுள்ள சூழ்நிலைகளை பொறுத்து நேரடியாக நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

என்ஜினீயரிங் கல்லூரி

தேர்வுகள் ஆன்லைனில் நடந்தாலும், தற்போது கல்லூரிகள் திறக்கப்படுவதன் நோக்கம் என்னவெனில் செய்முறை தேர்வுகள் நடக்க இருப்பதால் அத்தேர்வுகளுக்கு மாணவ- மாணவிகள் வந்தாக வேண்டும், அதற்காகத்தான் கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

ஆகவே பிப்ரவரி 1-ந் தேதி முதல் குறிப்பாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு அனைத்து இடங்களிலும் நடைபெறும். அதுபோல் மற்ற கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்படும்.

இருமொழி கொள்கை

தமிழகத்தை நீண்ட நெடிய காலமாக இருக்கும் இருமொழி கொள்கையை பின்பற்றுவதில் முதல்-அமைச்சர் மிக தீவிரமாக இருக்கிறார், அதை பின்பற்றுவோம், 3-வது மொழி எந்த மொழியாக இருந்தாலும் படிப்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறார். விரும்புகிற மாணவர்கள், எந்த மொழியை வேண்டுமானாலும் அவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும் முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தினால் இது எந்த மாநிலத்திற்கும் தவறு இழைப்பதாக இருக்காது.

தமிழகத்தில் மும்மொழி பற்றி பேசுகிற கவர்னர், வடமாநிலங்களில் எந்தவொரு மாநிலத்திலாவது நம்முடைய தென்னிந்திய மொழிகளை அங்கே விருப்ப பாடமாக வைத்திருக்கிறார்களா? ஏதோ பேச வேண்டும் என்று கவர்னர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பது மாற்ற முடியாத ஒன்று, அதுதான் செயல்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story