மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்


மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்
x
தினத்தந்தி 1 Feb 2022 3:11 AM IST (Updated: 1 Feb 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

சென்னை, 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மீதமிருக்கும் 3 இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்தநிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு தொடங்கியது. முதலில் பதிவு கட்டணம் செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்த 10 ஆயிரத்து 456 பேரில் 8 ஆயிரத்து 736 பேர் பதிவு செய்து இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. பதிவு செய்தவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Next Story