வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படை


வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படை
x
தினத்தந்தி 1 Feb 2022 3:41 AM IST (Updated: 1 Feb 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு பொருட்கள் வழங்குவதை கண்காணித்து தடுக்க ஒவ்வொரு மாநகராட்சியிலும் மண்டலம் தோறும் ஒரு பறக்கும் படையும், நகராட்சி, பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையில் தாசில்தார், 3 போலீசார், கேமராமேன் ஆகியோர் இடம் பெறுவர். இந்த பறக்கும் படை 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் செயல்படும்.

பணம், அன்பளிப்பு பொருட்கள் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமீறல், வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம், அன்பளிப்பு வழங்குதல், சமூக விரோத செயல்கள், மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற புகார்களின் மீது பறக்கும் படை முழு கவனம் செலுத்தும்.

வேட்பாளரோ, அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, பொதுமக்களோ உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றாலோ, ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேல் விளம்பர தட்டிகள், தேர்தல் பொருட்கள் மற்றும் போதைபொருட்கள், மது, ஆயுதங்கள் அல்லது அன்பளிப்பு பொருட்கள் போன்றவற்றை பறக்கும்படை ஆய்வின் போது பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

550 குழுக்கள்

பறக்கும் படைகளின் ஆய்வு மற்றும் பறிமுதல் செய்யும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 550 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கு ஒரு குழு பிரிக்கப்பட்டு மொத்தம் 1,650 பறக்கும் படைகளாக இந்தக்குழு இயங்கி வருகிறது.

பறிமுதல் செய்யப்படும் பணத்தை கோர்ட்டு உத்தரவுப்படி கருவூலத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்துக்கு பின்பும், விடுமுறை நாட்களிலும் கருவூலத்தில் செலுத்துவதற்கு கருவூல அலுவலகத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தேவையான அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story