ஆண் குழந்தையை கடத்த முயன்ற கணவன்-மனைவி கைது


ஆண் குழந்தையை கடத்த முயன்ற கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 1 Feb 2022 3:44 AM IST (Updated: 1 Feb 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடந்த முயன்ற இருவரை நேற்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.

சென்னை,

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிட தொழிலாளியாக வேலைப்பார்த்து வருபவர் ஹேமந்த்குமார் (வயது 35) இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பிறந்து ஒரு மாதமேயான ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த குழந்தையை காணவில்லை. இதையடுத்து ஹேமந்த்குமார் கேளம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முக்கிய இடங்களில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் ரெயில் மற்றும் பஸ் மூலம் வெளியூருக்கு தப்பி செல்லலாம் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர்.

குழந்தையின் புகைப்படம் மற்றும் தகவல்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் முக்கிய பஸ் நிலையங்கள் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து கண்காணிக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான பாதுகாப்பு படையினர், சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தம்பதியினர் மீது சந்தேகம்

அப்போது சந்தேகப்படும் படியாக ஒரு கணவன்-மனைவி இருவரும் கைக்குழந்தையுடன் ரெயில் நிலையத்தின் 9-வது நடைமேடையில் சுற்றிக் கொண்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு கேமராவில் கவனித்தனர். இதையடுத்து இருவரிடம் விசாரணை மேற்கொள்ள நடைமேடைக்கு சென்றனர். அதற்குள் அந்த தம்பதியினர் சென்டிரல்-பெங்களூர் இடையே இயங்கும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலின் டி-4 பெட்டியில் ஏறி செல்ல முயன்றதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த தம்பதியினரிடம் நடத்திய விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த தம்பதியினர் பெங்களூரை சேர்ந்த மஞ்சு (வயது 34), கோமளா (28) என்பதும், இவர்கள் கேளம்பாக்கத்தில் காணாமல் போன கைக்குழந்தையை கடத்தியவர்கள் என்பதும் தெரியவந்தது.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இதுகுறித்து உடனடியாக சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் குழந்தை இருக்கும் தகவலை கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் குழந்தையின் பெற்றோருடன் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றோரிடம் சேர்த்தனர். பிரிந்த குழந்தையை பெற்றோர் கட்டி தழுவிய காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தை திருட்டில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story