ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ததை எதிர்த்து அ.தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. தேர்தல் அறிவிப்பு குறித்து தமிழக அரசிதழில் ஜனவரி 28-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.
இந்தநிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான மறுதினம் அதாவது, ஜனவரி 29-ந் தேதி 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இதுபோல ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆளுங்கட்சி சட்டவிரோதமாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த இடமாற்றம் அரங்கேறியிருக்கிறது.
எனவே இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நடுநிலை, சுய செயல்பாட்டுடன் செயல்படும் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பில் வக்கீல் நவீன் மூர்த்தி ஆஜராகி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story