நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்..! - எடப்பாடி பழனிசாமி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Feb 2022 6:06 PM IST (Updated: 1 Feb 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

நிதிநிலை அறிக்கையில் ந‌திநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு நன்றி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்த நிதிமந்திரி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.  

கங்கை-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-பெண்ணையாறு நதிகள் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்த நிதிமந்திரி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும், எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும். மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதமர் மற்றும் நிதி மந்திரி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 





Next Story