முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியம் இல்லை அமைச்சர் அறிக்கை


முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியம் இல்லை அமைச்சர் அறிக்கை
x

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியம் இல்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையில் காலவாரியான நீர்மட்டம், அணையின் வழிந்தோடி மதகின் கதவுகளை இயக்குதல், அளவுமானிகள் பொருத்துதல், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்து கேரளாவைச் சேர்ந்த 4 தனி நபர்கள், 2020 மற்றும் 2021-ல் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த வழக்குகளுக்குத் தேவையான மறுப்பு மனுக்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகள் 15.12.2021 அன்று விவாதத்துக்கு வந்தபோது வாதி, பிரதிவாதிகள் ஏதேனும் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் வருகிற 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என ஆணையிட்டு, வழக்கை இந்த மாதம் 3-வது வாரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்குகளில் தமிழ்நாடு, கேரள அரசுகள் முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு மற்றும் மத்திய ஜலசக்தி அமைச்சகம் ஆகியவை பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசு அதன் பதில்மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 6.2.2021, 20.4.2021, 16.11.2021 மற்றும் 14.12.2021 தேதிகளில் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழுவும், மத்திய நீர்வள குழுமமும் இணைந்து பதில்மனுக்களை 19.4.2021 மற்றும் 14.10.2021 தேதிகளில் தாக்கல் செய்ததுடன், 27.1.2022-ந் தேதியில் மேலும் ஒரு நிலையறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளன.

முன்னுக்குப்பின் முரண்

இந்த மனுவில், 27.1.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அணை எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், பராமரிப்பு மற்றும் செப்பனிடும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், இப்பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் மேற்பார்வைக்குழு 14 முறை பார்வையிட்டதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அதன் பதில்மனுவில் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதில்மனுவின் ஒரு பகுதியில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறுஆய்வு தேவை என குறிப்பிட்டுள்ளது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டே அதன் 27.2.2006 மற்றும் 7.5.2014 தேதிகளில் வழங்கிய ஆணைகளில், எஞ்சிய பலப்படுத்தும் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டபின்தான் பிரத்தியேகமான நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதன்பின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பணிகளை முடித்த பின்தான் எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட வேண்டுமே தவிர, தற்போது அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய எந்த அவசியமும் இல்லை. அணையின் நீர்க்கசிவு, சுண்ணாம்பு வெளியேற்றம் இவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக மிக குறைவாகவே உள்ளன. ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும் அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும்.

தமிழக அரசு பதில்மனு

மத்திய நீர்வள குழுமத்தின் நிலையறிக்கைக்கான பதில்மனுவை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4-ந் தேதிக்குள் தக்க நடவடிக்கைக்காக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும். நமது நிலைப்பாடு குறித்த தகுந்த வாதங்களை தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story