நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும் மன்றக்கூட்ட அரங்கம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும் மன்றக்கூட்ட அரங்கம்
x
தினத்தந்தி 2 Feb 2022 4:46 AM IST (Updated: 2 Feb 2022 4:46 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மன்றக்கூட்ட அரங்கம் திறக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி உட்பட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அதிக வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக 200 வார்டுகள் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சி இருந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரிப்பன் மாளிகை செயல்பட்டு வருகிறது.

சென்னையில் அடையாளமாக திகழும் ரிப்பன் மாளிகை கடந்த 1909-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பிரசித்தி பெற்ற மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கவுன்சிலர்களின் மன்றக்கூட்டம் 2-வது தளத்தில் உள்ள மன்றக் கூட்டரங்கில் நடைபெறுவது வழக்கம்.

சுத்தம் செய்யும் பணி

இந்த மன்ற கூட்டரங்கில் கடந்த 2015-ம் ஆண்டு ரிப்பன் மாளிகையில் அன்றைய மேயர் சைதை துரைசாமி தலைமையில் மன்றக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து 6 ஆண்டுகளாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. இதனால் இந்த மன்றக் கூட்டரங்கம் கடந்த 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னையின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளதையொட்டி, இந்த மன்றக் கூட்டரங்கை சுத்தம் செய்யும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டரங்கின் பழமை மாறாமல் அங்குள்ள இருக்கைகளை சரி செய்தும், தேவையான இடங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் நடந்து வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரிப்பன் மாளிகையின் 2-வது தளத்தில் உள்ள மன்றக் கூட்டரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Next Story