மின்துறை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
புதுச்சேரி
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தனியார் மயம்
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
மின்துறை ஊழியர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை தலைவர் எச்சரித்தார். அதேநேரத்தில் மின்துறை அலுவலக பகுதியில் போராட்டங்கள் நடத்த 144 தடை விதித்து கலெக்டரும் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக மின்துறை தலைமை அலுவலகம் அருகே சோனாம்பாளையம் சந்திப்பில் மின்துறை ஊழியர்கள் கூடினார்கள்.
பணிகள் பாதிப்பு
அங்கு மின்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள், தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் மத்தியில் பேசினார்கள். மேலும் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மின்சார ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்கள்.
மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக புதிய இணைப்பு கொடுப்பது, மின்அளவீடு எடுப்பது, கட்டண வசூல், பழுதுபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் கட்டண வசூல் மையங்களும் மூடிக்கிடந்தன.
இதற்கிடையே மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மின்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கினார்.
பழுதுகள் சீரமைப்பு
இந்தநிலையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மின் வினியோகம் முற்றிலும் தடைபட்டது. இதனால் திடீரென முற்றுகை, மறியல் போராட்டங்களில் பொதுமக்கள் குதித்தனர்.
மின்தடை குறித்து தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் தரப்பட்டதால் மின் தடை அவ்வப்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காண்டிராக்டர்கள், ஐ.டி.ஐ. முடித்தவர்களை கொண்டு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் சிரமம்
மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவது, மிக்சி, கிரைண்டர் இயக்குவது போன்ற பணிகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் மின்விசிறி இயக்க முடியாததால் கொசுத்தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடரும்பட்சத்தில் பொதுமக்கள் தரப்பிலும் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது
Related Tags :
Next Story