புதுவையில் தனியார் மயத்துக்கு எதிராக வேலைநிறுத்தம் மின்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு


புதுவையில் தனியார் மயத்துக்கு எதிராக வேலைநிறுத்தம்  மின்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்  ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 3 Feb 2022 12:19 AM IST (Updated: 3 Feb 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் வாபஸ் பெற்றனர்.

புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமி  நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து  தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் வாபஸ் பெற்றனர்.

புதுவை மின்துறை

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். 
இந்தநிலையில் கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின் ஊழியர்கள்      சங்க   பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கி விட்டது.

பொதுமக்கள் மறியல்

ஏற்கனவே தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு என்ற ஒரு அமைப்பை ஏற் படுத்தி மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. 
ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்துறை தலைவரின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 2 நாட்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.
இதன்காரணமாக மாநிலம் முழுவதும் நகர, கிராமப் புறங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல், மின் அலுவலகம் முற்றுகை, பஸ் சிறை பிடிப்பு போன்ற போராட்டங்களில் குதித்தனர். 

பேச்சுவார்த்தை

இதனால் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மின்துறை     ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து சட்டசபையில்  உள்ள கேபினட் அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்று இரவு  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
இதில் அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தலைவர் சண்முகம் மற்றும் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய தொழிற்சங்கத்தினரும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மின்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இருதரப்பிலும் தற்காலிகமாக சமரசம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

உடன்பாடு

மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெற அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. 
இதில் மின்துறை தனியார் மயம் தொடர்பாக பல்வேறு சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊழியர்கள் பணி பாதுகாப்பு, மக்கள் நலன் குறித்து ஆராயப்பட்டது. 
புதுச்சேரியின் தற்போதைய நிலை குறித்து மீண்டும் மத்திய அரசுக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியல் கட்சி தலைவர்கள், மின்துறை ஊழியர்கள், பொதுமக்களின் கருத்துகளை அறிந்து மின்துறை தனியார் மயம் குறித்து அரசு முடிவு எடுக்கும்.
மின்துறை ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி மின்துறை ஊழியர்களும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். மின்துறை ஊழியர்களுக்கு அறிவித்த உத்தரவாதத்தை அரசு நிறைவேற்றும். மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியை மேற்காள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

போராட்ட குழு

புதுச்சேரி மின்துறை போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-
மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்களாக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்தநிலையில் முதல்-அமைச்சர், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மின்துறை ஊழியர்கள், பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் மின்துறை தனியார் மயம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். மின்துறை தொழிற்சங்க ஊழியர்கள் அளிக்கும் கருத்துக்களை மத்திய அரசுக்கு விளக்கி தனியார் மயமாக்கமாட்டோம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து வேலைநிறுத்த போராட்ட்ம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் நாளை (இன்று வியாழக்கிழமை) முதல் பணிக்கு திரும்புவோம். மின்துறை தனியார் மயம் நடவடிக்கை தொடர்ந்தால் ஊழியர்களின் போராட்டமும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story