ஒரே பயிற்சி பள்ளியில் படித்த 130 பெண் போலீஸ்- 25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த தோழிகள்
1997 ஆம் ஆண்டில் கோவையில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து தற்போது பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 130 மகளிர் போலீஸ் அதிகாரிகள், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடி பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மாமல்லபுரம்,
கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் மகளிர் போலீஸ் பிரிவில் 130 பேர் காவலர் பயிற்சி பெற்றனர். இவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாகவும், சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி சந்தித்த இவர்கள், தாங்கள் 1997-ம் ஆண்டில் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பெற்ற அனுபவங்கள், அங்கு நடந்த சுவாரசியமான பழைய மலரும் நினைவுகளை 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திலகவதி ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசானமுத்து ஆகியோர் கலந்து கொண்டு தற்போது பணியில் இருக்கும் 130 மகளிர் போலீஸ் அதிகாரிகளுக்கும் காவல் துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவது குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலாசனைகளையும் வழங்கி பேசினர். அவர்கள் காவலர் பயிற்சி பள்ளியில் பெற்ற அனுபவங்களை ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30 மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 25 மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், முதல்நிலை காவலர்கள் என 130 மகளிர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திலகவதி நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் குழந்தைகளின் பரத நாட்டியம், பலசுவை நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் விழாவின் முடிவில் மகளிர் இன்ஸ்பெக்டர்கள் சிலர் 25 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் ஒன்று கூடி சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் சினிமா பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்ததை காண முடிந்தது.
Related Tags :
Next Story